செவ்வாய், 19 மார்ச், 2013

இவை கவிதைகள் அல்ல ஆனால் கவிதை மாதிரி :)


மீண்டும் 

விரைந்தோடும் வாகனத்தோடு
பின்னோடும் மரங்களூடு
மீண்டும் ஊருக்கே ஓடிப்போய்  விடுகிறது 
மனம்...

*********************************************************************************

தவிப்பு 

தாழிட்ட  எண்ணங்களை  எல்லாம்
தாளில் இடும் நாள் நோக்கி
தவித்திருக்கும்
மனது

*********************************************************************************

இசை 

இலைகளின் வழி வழிந்தோடும்
முன்காலை வெண்பனியாய்     
உன்
இசையின் வழி கரைந்தோடுகிறது
என் மனது.....

*********************************************************************************

சொல் எனும்  முத்து 

முகிழ்ந்தெழும் வார்த்தைகளுக்குள்
மூழ்கிக்கொண்டே இருக்கிறேன்
இன்னும்
முத்தெடுத்தபாடில்லை நான்...

*********************************************************************************

இன்னும்...

எழுதாக் கவிதை
வரையா ஓவியம்
சொல்லா சொற்கள்
உதிராக் கண்ணீர்
வெடித்தெழாக் கோபம்
இன்னும் உண்டு என்னிடத்தே...

*********************************************************************************

நினைவில் காடுள்ள மிருகத்தை பழக்க முடியாதாம்...
நானும் அப்படித்தானோ?????????????

செவ்வாய், 25 டிசம்பர், 2012

அனைவருக்கும் இனிய கிருஸ்துமஸ் வாழ்த்துக்கள் ..............

 
எளிமையின் வடிவமென இவ்வுலகில் அவதரித்த ஏசுபிரானின்
பிறந்தநாளை அவரின் நினைவுகளோடு எளிமையாக, தூய்மையாக,
யாருக்கும் மனதாலும்  தீங்கு விளைவிக்காமல் கொண்டாடும் அனைத்து நண்பர்களுக்கும் என் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

 

வெள்ளி, 20 ஜூலை, 2012

விஷ(ம) விளம்பரங்கள் - சிந்தனை செய் மனமே...




பல நாட்களாகவே என் மனதை அரிக்கும் ஒரு விடயம் இது...
விளம்பரங்கள் பற்றியது.

முதலில் விளம்பரங்கள் என்பது இன்றைய காலகட்டத்தில் அவசியமானது தான் அதிலும் வீட்டு  உபயோகப்பொருட்கள், ஆடைகள், குழந்தை உபயோகப்பொருட்கள் இத்யாதி இத்யாதி அனைத்துமே விற்கப்பட வேண்டுமானால் அவை முதலில் பெண்களை கவர வேண்டும் என்பது தான் உண்மை. ஆனால் அப்படியான பொருட்களுக்கான விளம்பரங்களில் பெண்களையே சிறுமை படுத்தும், அபத்தமான, அல்லது அவர்களின் தன்னம்பிக்கையை அசைத்துப்பார்க்கும் விதமான காட்சிப்படுத்தல்களை வைப்பது ஏன்? என்பது தான் என் மனதை அரிக்கும் கேள்வி.

முதலில் ஒரு நைட்டி விளம்பரம் இதில் நடிகையும் குடும்பத்தலைவியுமான தேவயாணி சொல்லுவார் "ஒரு குடும்பத்தலைவியாக என்னை உணர வைப்பது ............ நைட்டி தான் "
ஏங்க ! இது உங்களுக்கே நியாயமா? 

அடுத்து குழந்தைகளுக்கான ஒரு ஜெல்லி விளம்பரம்  அதில் நடிகை கஜோல் தன் குட்டி  மகனை பார்த்து ஸ்கூல் போகாதே டா கண்ணா என்பார் மகன் மறுத்து விடுவார், ஒரு முத்தம் குடு என்பர் மகன் எதுவானாலும் தள்ளி நில் என்பார்.. பிறகு வாய்ஸ் ஓவரில் சொலவார்கள்"பாருங்கள் அம்மாவின் பாசம் இங்கே களங்கப்படுகிறது " கரணம் அம்மா மகனின் சட்டைப் பையில்  இருக்கும் அந்த ஜெல்லியை எடுக்க தான் அப்படி பாசமாக இருக்கிறாராம்..
என்ன கொடும சார் இது...? 
உங்க வியாபாரத்துக்காக தாயுடைய அன்பை இப்படி கொச்சை படுத்தி காட்டுவது நியாயமா?
அம்மாவே தெய்வம் அவங்கள பூஜைபன்னுங்க அப்பிடின்னு குழைந்தைகளுக்கு சொல்லி குடுக்க சொல்லி சொல்ல வரல ... ஆனால் அந்த அன்பை இப்படி கொச்சை படுத்தாமலாவது  இருங்க... உங்களுக்கு புண்ணியமா போவும்.

இது இன்னொரு கொடுமை ....ஒரு பொண்ணுக்கு முகத்தில் பரு வந்திருக்கும் அதற்காக அந்த பெண் வெளியே எங்கும் போகாமல் வீட்டில் கட்டிலின் கீழ் ஒளிந்திருப்பாள் ..அந்த க்ரீம் பூசிய  பிறகு பரு மறைந்து விட வெளியே நடமாடுவாள்...
பரு வருவது என்பது ஒரு வயதில் இயல்பான விடயம் அதற்கான சரியான உணவுகளும் பராமரிப்பும் அதை மாற்றி விடும்.. இதற்காக வீட்டில் ஒளிந்திருக்க வேண்டும் என்பது போல காட்டுவது என்ன வகையில் நியாயம்?
(மனசாட்சி : போதும் நீ முதல்ல என்ன நியாயம் ? அப்படின்னு கேக்குறத நிறுத்து 
நான்: அவங்கள முதல்ல நிறுத்த சொல்லு நான் நிறுத்துறேன் )

இந்த விளம்பரம் மட்டும் என்று இல்லை பெரும்பாலும் எல்லா அழகு க்ரீம் விளம்பரங்களும் கருப்பாக இருப்பது பாவம் என்பது போலவும் கருப்பாக இருப்பவர்கள் தன்னம்பிக்கை அற்று போவர்கள் என்பதாகவும் காட்டுவது அபத்தம் மட்டுமல்ல ஒரு வித மனித உரிமை மீறலுக்கான  தூண்டல் என்றும் சொல்லுவேன்.
இவ்வளவு காலம் பெண்களை மட்டும் குறி வைத்திருந்த இந்த வெள்ளையாக்கும் க்ரீம் விளம்பரங்கள் இப்போது ஆண்களையும் குறிவைக்கிறது..(அது உங்கள நோக்கி தான் வருது எல்லாரும் ஒடுங்க) 


இப்ப சொன்ன விளம்பரங்கள் எல்லாமே நான் சில இந்திய சேனல்களில் கண்டது தான் (நல்ல வேளை  என் வீட்டில் கேபிள் இணைப்பு  இல்லை என்று நினைக்க வைத்தது)

ஆனால் நம் நாட்டு விளம்பரங்களிலும் இதற்கு சளைக்காதவைகள் உண்டு தான் ஆனால் குறைந்தளவிலேயே உள்ளது . மேலும் பெரும்பாலும் இந்திய விளம்பரங்களே இங்கும் ஒளிபரப்பப்படுகிறது.. ஆகவே இது எல்லாருக்கும் பொருந்தும்.

இவைகளை  தவிர சில பான விளம்பரங்களை பார்க்கும் போது எனக்கு அழுவதா சிரிப்பதா  என்று தெரியாது. எதோ குழந்தை உண்ணாவிட்டாலும் அந்த பானத்தை  அருந்தினால் தேவையான எல்லா சத்தும் கிடைத்து விடும் என்பதாக ஒரு மயக்கத்தை ஏற்படுத்தி விடுகிறார்கள். குழந்தைகளின் மனதில் இது ஆழமாக பதிந்து விடும் அபாயத்தை அதன் பின் விளைவுகளை யாரும் உணர்ந்ததாக தெரியவில்லை. (இதுல காட்டுற ஆராய்ச்சி எல்லாம் மெய்யாலுமே செய்யுறங்களா ?  ) அதுமட்டும் இல்லை இவைகளை தங்கள் குழந்தைகளுக்கு கொடுத்தால் தான் அவள் நல்ல தாய் எனும் பொருள் தொனிக்க இந்த விளம்பரங்கள் அமைந்திருப்பது அபத்தத்தின் உச்சம்.


இவை எல்லாவற்றுக்கும் சிகரம் வைப்பது போல இருக்கும் ஒரு விளம்பரம் தான்  அந்த ஆண்களுக்கான வாசனை திரவிய விளம்பரம் . இதில் பல உள்ளன அவை அனைத்துமே எவ்வளவு முடியுமோ அவ்வளவு பெண்களை கீழ்த்தரமாக சித்தரிக்கும் விளம்பரங்கள் தான்.(பெண்ணிய அமைப்புகள் எதுவும் இதற்கு எதிராக குரல் எழுப்பவில்லையா? அல்லது எனக்கு தான் தெரியவில்லையா?) 

விளம்பரங்கள் என்பது அவசியம் தான் ஆனால் அதை விட எமது பெண்களின் மரியாதை தன்னம்பிக்கை மற்றும் குழந்தைகளின் உடல் உள ஆரோக்கியம் என்பது முக்கியம் இல்லையா?
விளம்பர கம்பனிகளும் வியாபாரிகளும் கொஞ்சம் சிந்திப்பார்களா?




புதன், 20 ஜூன், 2012

ஏன் இப்படி ????



நான் : ஹலோ ஆஷா...(பெயர் மாற்றப்பட்டுள்ளது.) எப்பிடி இருக்க?


ஆஷா : ஹலோ சொல்லு நான் நல்ல இருக்கேன்..


நான்:நம்ம ...... தோழியோட அப்பா இறந்துட்டாருன்னு சொன்னேனே நம்பர் கூட அனுப்பினேன் போன் பண்ணியா?


ஆஷா : ஆஆ ஆமாண்டி நீ அனுப்பின ஆனா  நான் தான் மறந்துட்டேன்...


நான் : என்னடி நீ.. நாம எவ்வளவு க்ளோஸ் friends இப்பிடி சொல்லலாமா? உனக்கு வீடு கூட பக்கம் தானே...


ஆஷா : ஆமா... எங்க டி மகளோட ஸ்கூல் வேலைகளால மறந்திருச்சி...
நான் : (மனதிற்குள்)சாவ விசாரிக்க கூட நேரமில்லாம போக அப்பிடி என்ன டி படிக்கிறா  உன் மக (மகள் படிப்பது 2ம்  வகுப்பு என்பதை அறிக )


-----------
-----------
நான் : ஆமா எப்பவுமே நான் தான் பேசுறேன் நீ சும்மா கூட போன் பண்ண மாட்டியா?


ஆஷா : போன் பண்ணி என்ன தான் பேச??????


நான் : ங்கே .............

இது எனக்கும் என் தோழி ஒருவருக்கும் நடந்த தொலைபேசி உரையாடல்...
இதில் வரும் இன்னொரு தோழியும் எங்களுடன் படித்தவர் நாங்கள் 5 பேர் மிக நெருங்கிய தோழிகளாக இருந்தோம்... அப்படி ஒரு தோழியின் தந்தையின் மரணத்தை தான் போன் பண்ணி விசாரிக்கவும் மறந்து விட்டதாக சொல்கிறாள்..
இத்தனைக்கும் எத்தனையோ முறை இவருக்கு உதவிகளும் .... 7 மணி நேரம் பயணப்படவேண்டிய பயணத்தை கூட பிற்போட்டு இவரின் ஆறுதலுக்காக வேண்டி இவரை உற்சாகப்படுத்தி பேசி பேசி தெளிய வைத்த என்னிடம் "போன் பண்ணி என்ன தான் பேச " என்று கேட்கிறாள்...
பெண்கள் திருமணத்தின் பின்னர் நட்பு வட்டத்திலிருந்து சற்று விலகுவது இயல்பு . அதற்கு பலதரப்பட்ட காரணங்கள் உண்டு என்றாலும் இவளையும் இவள் குடும்ப பின்னணியையும் நன்கு அறிந்தவள் என்ற காரணத்தினால் இதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை..

ஒரே ஒரு கேள்வி தான் "என் இப்படி ????"
------------------------------------------------------------------------------------------------------------

நான் சீரியல் பார்ப்பதில்லை  (கேபிள் கூட கிடையாது ) ஆனால் இலங்கை தமிழ் சேனல்களிலும் சில இந்திய சீரியல்களை போடுகிறார்கள்... சில நேரம் எதற்காவது சேனல் மற்றும் போது  வரும்.  பார்க்கும் போதே கலக்கமாக இருக்கும்...  ஒருவர் அழுகிறார் அல்லது சவால் விடுகிறார்...அல்லது  யாரையாவது கொல்லவோ பழிவாங்கவோ திட்டமிடுகிறார்...
ஏங்க இங்க நமக்கு நம்ம பொழப்ப பார்க்கவே நேரம் சரியா இருக்கு இதுல இவங்க பிரச்சின வேற பார்க்கனுமா ... ஆனா இதயும் பல பேரு உக்காந்து பார்க்கிரகளே.....
என் இப்பிடி??? (எனக்கும் அழுவாச்சியா வருது...)
------------------------------------------------------------------------------------------------------------
விஷயம் கிடைக்கும்போது எழுத நேரம் இல்லாமல் போகும் ஆனா எழுதனும்னு வந்து உக்காந்தா...எதுவுமே உருப்படியா நினைவுக்கு வருதில்லையே... பதிலுக்கு தூக்கம் தான் வருது..
என் இப்படி??? (அவ்வ்வ்வவ்வ்வ்வ்)
இப்ப உங்களுக்கு "உன்னை எண்ணி பார்க்கையில் கவிதை கொட்டுது அதை எழுத நினைக்கையில் வார்த்தை முட்டுதுன்னு" பாட்டு ஞாபகம் வந்தா நான் பொறுப்பில்லை ...

புதன், 18 ஏப்ரல், 2012

யாழ் பயணமும் புது வருடமும்

அனைவருக்கும் சித்திரை திருநாள் வாழ்த்துகள் (கொஞ்சம் லேட் தான் மன்னிச்சுடுங்க)

தூரப் பிரயாணம் அதனால் வந்த வேலைப்பளு, ரெண்டு சுட்டிகளை சமாளிக்கும் கடமை, வீட்டிலிருந்தபடியே செய்யும் உத்தியோகச் சுமை இப்படி பல விடயங்கள் இருந்தது அது தான் பதிவுகள் பக்கம் அடிக்கடி வர முடியவில்லை.(மனசாட்சி:- இல்லன்ன மட்டும் அப்பிடியே எழுதிக் கிழிச்சிருமாக்கும் இந்த சோம்பேறி)

சித்திரை வருடப்பிறப்பு வழக்கம் போல எங்க அத்தை வீட்டில்(என் புகுந்த வீடு )கலகலப்பாக இருந்தது. என்ன! யாழ்பாண வெய்யில் தான் தாங்க முடியல...
மற்ற படி ரொம்ப ஜாலியா இருந்தது. 
விறகடுப்பு சமையல், சுடச் சுட கறந்த பாலில் தேநீர், இயற்கையாக கிடைத்த மரக்கறிகளிலும், கரையில் இறங்கிய சூட்டுடன் நாங்கள் வங்கி வந்த மீன் நண்டுகளில் சமைத்த சாப்பாடு, இயற்கை காற்று என்று மிக நல்ல சுழலில் ஒரு  வாரம் போனதே தெரியவில்லை.

ம்ம்ம் மீண்டும் கொழும்பில் பால் மா தேநீர், குளிர்சாதனப்பெட்டியில் வைத்த  காய்கறி, அவசர சமையல் என்று வந்து விட்டோம். திரும்பி அங்கு போற வரைக்கும் அவல நினைச்சு உரல இடிப்போம் என்ன செய்ய..

ஆனால் அங்கு சென்றதால்  கிடைத்த சிறு ஓய்வில் நிறைய எழுதுவதற்கான விடயங்கள் கிடைத்தது.. (மனசாட்சி:- இவுங்க பெரிய எழுத்தாளர் அப்பிடியே வானத்த பார்த்து  யோசிச்சிட்டு வந்திருக்காங்க இனி எழுதிருவாங்க எல்லாரும தவறாம வந்து படிச்சிருங்க)
நேரம் கிடப்பதை பொறுத்து பகிர்துகொள்ள ஆவலாக  இருக்கிறேன் ...
(மனசாட்சி:- உங்கள எல்லாம் அந்த ஆண்டவன் தான் காப்பத்தனும் )




திங்கள், 26 மார்ச், 2012

ஏன் இப்படி???????

முன் குறிப்பு..
நம்மை சுற்றி சில விடயங்கச்ல் நடக்கும் போது நம் அனைவருக்கும் வரும் ஒரு கேள்வி தான் இது, சிலது சின்ன விடயமாக இருக்கும் சிலது பெரிய விடயமாகவும் இருக்கும் . என் இப்படி என்று என்னை கேட்க வைத்த சில குழப்பமான, மகிழ்ச்சியான, நகைச்சுவையான ,வேதனையான,இன்னும் பல "...யான" க்களை  இதில் பகிர்த்து கொள்கிறேன்...


#1 
அமிர்தன் சிறு குழந்தையாக இருந்த போதே எல்லோரிடமும் நன்றாக பழகுவான். யார் தூக்கினாலும் அவர்களிடம் செல்வான் ..பயப்படவே மாட்டான். அம்மா தான்  செய்யணும் என்று அடம் பிடிக்கவும் மாட்டான் (சில சமயங்களில் நான் இந்த குணத்திற்காக கவலைப்  படுவதும் அவர் என்னை சமாதானப்படுத்துவதும் உண்டு)
அனால் என் மகள் இதற்கு நேர் எதிர் என்னை மட்டுமே தேடுகிறாள் . யாரிடமும் செல்வதில்லை (அவள் அப்பாவிடம் கூட) எந்த தேவையும் நானே தான் நிறைவேற்ற வேண்டும். நான் கண்ணில் படாத போது விளையாட்டிலோ அல்லது வேறு யாரிடமோ இருந்தாலும் நான் தென்பட்டு விட்டால் கத்தி கலாட்டா செய்து என்னிடம் வந்து விடுவாள்..
ஏன் இப்படி ??????????????????????????????????????????????????????????????????????


#2 
நாங்கள் இப்போது இருக்கும் தொடர் மாடிக்  குடியிருப்பில் தான் கடந்த 3  வருடங்களாக வாடகைக்கு குடியிருந்தோம் (சமீபத்தில் தான் சொந்தமாக ஒரு அபர்ட்மன்ட் வாங்கினோம் ) வாடகைக்கு இருந்த போதும் சரி இப்பொழுதும் சரி  எங்கள் கார் ஒரு குறிப்பிட்ட இடத்தில் தான் நிறுத்துவது வழக்கம் (இங்கு வாகனம்  நிறுத்தும் பகுதி சிறியது மற்றும் ஒரு சிலருக்கு மட்டுமே வாகன நிறுத்தல் வசதி உண்டு ) வாடகைக்கு இருந்த வரைக்கும் எங்கள் காரின் மேல் அந்த மேல் வீட்டு ஐயரம்மா குப்பை போடுவதில்லை .. ஆனால் என்றைக்கு சொந்தமாக வீடு வாங்கினோமோ அன்றில் இருந்து  எங்கள் கார் குப்பை குழியாக நினைக்கத் தொடங்கிவிட்டார் ... நேரில் சொல்லியும் கேட்பதில்லை. என் வீட்டு சமையலறையின் கீழ் உங்கள் கார் நிற்பது தான் பிரச்சினை என்கிறார் . (பொறுத்து பார்த்து விட்டு இப்போது காருக்கு கவர் வங்கி போட்டு விட்டோம்). 
3  வருடமாக வராத பிரச்சினை எப்படி இப்பொழுது வந்தது (இத்தனைக்கும் பல சமயங்களில் நாம் அவருக்கும் அவர் மகன்மாருக்கும் லிப்ட் கொடுப்பதும் உண்டு)
ஏன் இப்படி ???????????????????????????????????????????????????????????????????


#3 
இது பல அம்மாக்களின் கேள்வியாகத்தான் இருக்கும்...
அமிர்தனும் சரி அகியும் சரி எப்பொழுதும் நான் சாப்பிட  அமரும் நேரத்தில் தான் அழ ஆரம்பிப்பார்கள், அல்லது ஈரம் செய்வார்கள். அதுவரை நல்ல உறக்கத்தில் இருக்கும் பிள்ளை சரியாய் நான் சாப்பிடும் போது தான் எழும்பி அழும்.
ஏன் இப்படி ???????????????????????????????????????????????????????????????????


#4 
சாதாரண நாளில் எல்லாம் நன்றாக இருக்கும் முகமும் முடியும் எதாவது  விழா விசேசத்திற்கு  போகும் போது மட்டும் டல்லடிப்பதும் சண்டித்தனம் செய்வதும்...
ஏன் இப்படி????????????????????????????????????????????????????????????????????


இப்படி நிறைய இருக்கு நினைவு வர வர எழுதுறேன் ............











புதன், 15 பிப்ரவரி, 2012

பிறந்த நாள் வாழ்த்து...

"ஒரு குழந்தை பிறக்கும் போது தான் ஒரு தாயும் பிறக்கிறாள்"  
எவளவு உண்மையான வரிகள்...
அமிர்தவர்ஷன்........
ஒரு மெல்லிசையாக இவன் பிறந்த கணத்தில் தான் நாமும் புதிதாய் பிறந்ததாக உணர்ந்தோம்....
அது நடந்து இதோ மூன்று வருடங்கள் ஆகி விட்டதை நம்பவே முடியவில்லை...

ஆம்....
இன்று அமிர்தனின் மூன்றாவது பிறந்தநாள்.... அவரது ப்ரீ ஸ்கூல் நண்பர்களோடு சிறப்பாக கேக் வெட்டி கொண்டாடினார்....

எங்கள் செல்வம் இன்று போல் என்றும் மகிழ்ச்சியாக வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்..